37 வெள்ளி பொருட்கள் மாயம் கோவில் எழுத்தரிடம், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை


37 வெள்ளி பொருட்கள் மாயம் கோவில் எழுத்தரிடம், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை
x
தினத்தந்தி 5 Feb 2018 3:45 AM IST (Updated: 5 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கைசேரி வரதராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான வெள்ளி பொருட்கள் மாயமானது தொடர்பாக, பசுபதீஸ்வரர் கோவில் எழுத்தரிடம், ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கைச்சேரி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சாமி அணிகலன்கள் உள்பட 53 வெள்ளி பொருட்கள் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து வெள்ளி பொருட்களை கோவிலுக்கு வழங்கிய உபயதாரர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் பசுபதீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் கோசலராமன் மற்றும் போலீசார் பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி ஆய்வு செய்தனர். இதில் 16 பொருட்கள் மட்டுமே கோவிலில் இருந்தன. 37 வெள்ளி பொருட்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக பசுபதீஸ்வரர் கோவிலின் தலைமை எழுத்தர் ராஜா(வயது40) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.

திருமங்கைச்சேரி வரதராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான வெள்ளி பொருட்கள் மாயமானது தொடர்பாக ராஜாவை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு, ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், ராஜாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் சிலைகள் மாயமானது எப்படி? சிலைகள் எங்கு உள்ளது? என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஐ.ஜி. விசாரணை நடத்தியதாக கூறப் படுகிறது. 

Next Story