பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் கட்டிட தொழிலாளர்கள் வலியுறுத்தல்


பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் கட்டிட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Feb 2018 4:15 AM IST (Updated: 5 Feb 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று கட்டிட தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவற்றின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வி, தவமணி, பிரின்ஸ்ஜெபர்சன், ராஜா, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விக்டர் வரவேற்றார்.

கூட்டத்தில், பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும். காவிரிடெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. பயிர்களை காக்க கர்நாடக முதல்-மந்திரியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைக்க வேண்டும். தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும்.

உடலுழைப்பு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்விநிதி வழங்க கோரி மனு கொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே கல்விநிதியை உடனே வழங்க வேண்டும். ஒரு லோடு மணல் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பதால் கட்டுமான தொழில் முடங்கிவிட்டது. எனவே மணலை இறக்குமதி செய்வதோடு, விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட நிர்வாகிகள் முருகையன், ஆரோக்கியராஜ், சுரேஷ், அந்தோணிராஜ், அமுதா, பார்த்தசாரதி, ரஜித், விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி மாவட்ட தலைவர் ஜோசப்பெஸ்கி நன்றி கூறினார். 

Next Story