முன்விரோதத்தில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் மீது தாக்குதல் பெண்கள் உள்பட 5 பேர் கைது


முன்விரோதத்தில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் மீது தாக்குதல் பெண்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2018 3:30 AM IST (Updated: 5 Feb 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான முன்விரோதத்தில் அக்காள், தம்பி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வடக்குமாதவி அம்பேத்கர்தெருவை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி காசியம்மாள் (வயது 45). இவர்களுடைய மகள் சுதா (27), மகன் மணிகண்டன் (20). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, காசியம்மாள் தான் வளர்த்து வந்த சில ஆடுகளை தனது தந்தை சஞ்சீவிக்கு கொடுத்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது. எனினும் பணம் தரப்படாமல் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்தது. இது தொடர்பாக சஞ்சீவி தரப்புக்கும், காசியம்மாள் தரப்புக்கும் அடிக்கடி பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

5 பேர் கைது

இந்நிலையில் தனக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1½ லட்சம் பணம் தர வேண்டும் என கூறி நேற்று முன்தினம் காசியம்மாள், சுதா, மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து சென்று சஞ்சீவியின் மகன்கள் அதே பகுதியை சேர்ந்த அழகுதுரை (43), செந்தில்குமாரிடம் (33) கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அழகுதுரை, செந்தில்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து காசியம்மாள் உள்பட 3 பேரையும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மணிகண்டனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுதா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அழகுதுரை, அவரது மனைவி கலைசெல்வி, செந்தில்குமார், அவரது மனைவி முத்தழகி, பழனிமுத்து மனைவி பூபதி (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அந்த 5 பேரும் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story