சென்னை ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி கணவன்-மனைவி கைது


சென்னை ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 5 Feb 2018 4:12 AM IST (Updated: 5 Feb 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பட்டாளம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் பட்டாளம் சி.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த புகாரில், தான் வசிக்கும் பகுதியில் கிருஷ்ணவேணி (வயது 42) என்ற பெண்ணும், அவருடைய கணவர் சீனிவாசராவும் (50) இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் நான் உள்பட 20 பேர் சீட்டு பணம் கட்டி இருந்தோம். ஆனால் ஏலச்சீட்டு முதிர்வு அடைந்த பின்னரும் அவர்கள் பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எங்களுடைய பணத்தை பெற்றுத்தர வேண்டும்’ என்று ராஜேஸ்வரி கூறி இருந்தார்.

இந்த புகாரின்பேரில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணவேணியும், அவரது கணவர் சீனிவாசராவும் பதிவு செய்யப்படாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடியே 62 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story