நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை: கலெக்டர் உள்பட 13 அதிகாரிகளின் கார்களை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு


நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை: கலெக்டர் உள்பட 13 அதிகாரிகளின் கார்களை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:30 AM IST (Updated: 6 Feb 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்காததால், கலெக்டர் உள்பட 13 அதிகாரிகளின் கார்களை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை அருகே நிலையூர் கால்வாய் அமைக்கும் பணிக்காக கடந்த 2014-ம் ஆண்டு சிலரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன்படி பெருங்குடியை சேர்ந்த அடைக்கண், அழகம்மாள் ஆகியோரின் 69 சென்ட் நிலத்திற்கு ரூ.20 ஆயிரத்து 500 இழப்பீடும், கண்ணன், தெய்வக்கனி ஆகியோரின் 21 சென்ட் நிலத்திற்கு ரூ.7 ஆயிரத்து 600 இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த தொகையை ஏற்க மறுத்து அவர்கள் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அடைக்கண் மற்றும் அழகம்மாளுக்கு ரூ.21 லட்சத்து 42 ஆயிரமும், கண்ணன், தெய்வக்கனிக்கு ரூ.9 லட்சத்து 19 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் அந்த உத்தரவு நிறைவேற்றப்பட வில்லை. இந்த உத்தரவை நிறைவேற்றக்கோரி அவர்கள் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இழப்பீட்டு தொகை வழங்காததால் மதுரை மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்பட 13 அதிகாரிகளின் கார்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலுடன் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கோர்ட்டு உத்தரவை காட்டி கலெக்டர் காரை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள், அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பணம் வழங்கப்படும் என்று கூறியதால், கோர்ட்டு ஊழியர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story