பஸ் மோதி 6 முருகபக்தர்கள் பலியான சம்பவம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்


பஸ் மோதி 6 முருகபக்தர்கள் பலியான சம்பவம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
x
தினத்தந்தி 6 Feb 2018 3:45 AM IST (Updated: 6 Feb 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

பஸ் மோதி பலியான 6 முருகபக்தர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க கேட்டு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். நேற்று காலை திருப்பூர் மாவட்ட அனைத்து முருக பக்தர்கள் பேரவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் விபத்தில் பலியான 6 முருகபக்தர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் உடன் வந்தனர். அவர்கள் தாராபுரம் அருகே பஸ் மோதி இறந்த பழனி பாதயாத்திரை பக்தர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி வந்திருந்தனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த போலீசார் அந்த பதாகைகளை அவர்களிடம் இருந்து வாங்கினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் தாராபுரம் அருகே திருப்பூரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில் சாலையோரமாக சென்ற முருக பக்தர்கள் 6 பேர் பலியானார்கள். பஸ் டிரைவர் பணிச்சுமை காரணமாக தூங்கியதும், முகப்பு விளக்கை எரிய விடாமல் பஸ்சை இயக்கியதுமே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரியவருகிறது. இதற்காக பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவருடைய பணிச்சுமை அதிகரிப்புக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினரில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளும், கல்வியை தொடர முடியாத குழந்தைகளும், தொழில் எதுவும் செய்ய முடியாத வயதான பெற்றோரும் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகிறார்கள். இதற்காக தமிழக முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சம் போதுமானதாக இல்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வியை தொடரவும், வயதான பெற்றோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

திருப்பூர் வழியாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருப்பூர்-பழனி சாலையில் தனி நடைபாதை அமைத்துக்கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று அனைத்து பாதயாத்திரை முருக பக்தர்கள் சார்பிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

காங்கேயம் பகுதி பா.ஜனதாவினர் அளித்த மனுவில், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காங்கேயம் பழைய கோட்டை ரோடு, சென்னிமலை ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய வழிகளில் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பயன்படுத்திய தண்ணீர் பாக்கெட்டுகள் சாலையின் ஓரத்தில் சிதறிக்கிடக்கிறது. நகராட்சி பகுதிகளில் வீசப்பட்ட குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. ஆனால் ஊராட்சி பகுதிகளில் உள்ள பாலித்தீன் குப்பைகள் அப்படியே அகற்றப்படாமல் உள்ளன.

சென்ற ஆண்டும் இதுபோல் குப்பைகளை அகற்றாமல் விட்டதால், அவை பூமிக்குள் புதைந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில் பெரும்பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே பாலித்தீன் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தின் சார்பில் அளித்த மனுவில், அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் மானியம் பெறுவதற்காக பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்து வருகிறார்கள். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பெண்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்தனர். 5-ந் தேதி(நேற்று) விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாளாகும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் எல்.எல்.ஆர். (பழகுனர் உரிமம்) போட்டு உரிமம் பெற காத்திருக்கிறார்கள். எனவே மானியத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆதித்தமிழர் பேரவை மாநில துணை செயலாளர் சோழன் தலைமையில் அந்த அமைப்பினர் அளித்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் நடந்த இந்து மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் அர்ஜூன்சம்பத், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமானை கொச்சையாக ஒருமையில் பேசி உள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரை ஆதிக்க உணர்வுடன் பேசிய அர்ஜூன் சம்பத் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Next Story