தந்தை கண்முன்னே சம்பவம் விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் சாவு


தந்தை கண்முன்னே சம்பவம் விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் சாவு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே தந்தை கண்முன்னே விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் பரிதாபமாக இறந்தான். பொதுமக்கள் போராட்டம் நடத்தி லாரிக்கு தீவைத்தனர்.

பெங்களூரு,

பெலகாவி டவுனில் வசித்து வருபவர் அகமது செய்க். மெக்கானிக். இவருடைய மகன் இனாயத் பஷீர் (வயது 15). நேற்று மாலையில் இனாயத் பஷீர் தனது தந்தை அகமது செய்க் உடன் மோட்டார் சைக்கிளில் சங்கொள்ளி ராயண்ணா சர்க்கிள் அருகே சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த சாலையில் வந்த லாரி அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த இனாயத் பஷீர் பலத்த காயமடைந்து தனது தந்தை அகமது செய்க்கின் கண்முன்னே பரிதாபமாக இறந்தான். மேலும், அகமது செய்க் காயமடைந்தார். இதற்கிடையே, லாரியை அங்கேயே விட்டுவிட்டு அதன் டிரைவர் ஓடிவிட்டார்.

விபத்தை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அகமது செய்க்கின் குடும்பத்தினர் சம்பவ இடத்தில் திரண்டு இனாயத் பஷீரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் லாரி மீது கற்களை வீசியதோடு, லாரிக்கு தீவைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து லாரியில் பிடித்த தீயை அணைத்தனர்.

மேலும், பெலகாவி மாநகர போலீஸ் கமிஷனர் ராஜப்பா உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவரை உடனடியாக கைது செய்வதாக கூறினார்கள். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இனாயத் பஷீரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெலகாவி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story