கள்ளக்காதலியுடன் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை


கள்ளக்காதலியுடன் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Feb 2018 4:30 AM IST (Updated: 6 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலியுடன் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பா.முத்தம்பட்டியை சேர்ந்தவர் காசிநாதன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் பிரபு (வயது 29). கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சண்முகத்தின் மகள் நித்யாவும் (24) காதலித்து வந்தனர். பின்னர் இருவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பிரபுவும், நித்யாவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

இதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் எழில் (25). என்ஜினீயர். இந்த நிலையில் எழிலுக்கும், நித்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் அவதூறாக பேசினர். இருவர் காதிலும் விழும்படி அவர்களை திட்டியும் உள்ளனர். அவர்களை குடும்பத்தினரும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து எழில், தனது கள்ளக்காதலி நித்யாவுடன் ஊரைவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தலைமறைவானார். இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் இருந்தது. அவ்வாறு தலைமறைவான இருவரும் மோட்டார்சைக்கிளில் பல்வேறு இடங்களுக்கு சென்று மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர். ஊர்க்காரர்கள் வெறுத்த நிலையில் பெற்றோரும் தங்களை ஏற்காததால் இனியும் வாழ்வதா? என விரக்தியின் விளிம்புக்கே சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவண்ணாமலை செல்லும் சாலையில் விஷமங்கலம் என்ற ஊரின் அருகே உள்ள ஏரிக்கரையில் மோட்டார்சைக்கிள் ஒன்று நிற்பதாகவும் அருகில் ஒரு ஆணும், பெண்ணும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் 2 மாதங்களுக்கு முன்பு தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியான எழில் மற்றும் நித்யா என்பது தெரியவந்தது. இருவரையும் மீட்டபோது நித்யா இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு தாலுகா போலீசார் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் விரைந்து வந்தனர். அவர்கள் நித்யாவின் உடலை கைப்பற்றி, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த என்ஜினீயர் எழிலை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இருவரும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

எனினும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் கணவர் பிரபுவை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர். 

Next Story