குடிநீர் கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் மணமேல்குடி அருகே சீகனேந்தல் மற்றும் திருநாராயணமங்களம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எங்கள் ஊரில் உள்ள ஏரி, குளம் குட்டையில் சிறிதளவும் தண்ணீர் இல்லை. இதனால் கால்நடைகளும் பொதுமக்களும் குடிநீரின்றி தவித்து வரும் அவல நிலை உள்ளது.

மேலும் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் பெண்கள் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மனு கொடுத் தோம். இதையடுத்து நட வடிக்கை எடுக்க மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும் இதுவரை எங்களுக்கு குடிநீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்க இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை தி.மு.க நகர செயலாளர் நைனாமுகமது பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்காக நகராட்சி மூலம் வார்டுகள் பிரித்து சீரமைக்கும் பணி முடித்துள்ளது. சீரமைப்பு என்ற பெயரில் கட்டிடங்களை மையமாக வைத்து பிரிக்கப்பட்டுள்ளது. இது தவறு. உள்ளாட்சி என்பது மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் அமைப்பாகும். மக்கள்தொகை அடிப்படையில் பிரித்தால் தான் மக்களுக்கு தேவையான சேவைகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்ய முடியும். மக்களுக்கும் அதன் பலன் நேரடியாக கிடைக்கும்.

எனவே சீராய்வு என்பது மக்கள்தொகை அடிப்படையில் செய்ய வேண்டும். கட்டிடங்கள் அடிப்படையில் பிரிப்பது என்பது குளறுபடிகளை உண்டாக்கிவிடும், தற்போது பிரிக்கப்பட்டுள்ள எந்த வார்டும் ஒருசேர இல்லாமல் தொங்கு பாலம் போல மாறி மாறி உள்ளது. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சீராய்வு செய்ய வேண்டும். சீரமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் முறையாக மறு சீராய்வு செய்து வெளியிடுவதற்கு முன் அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் காண்பித்து ஒப்புதல் பெற்று வெளியிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Next Story