கணவர்-உறவினர்கள் அடித்து சித்ரவதை: காதல் திருமணம் செய்த பெண், கலெக்டரின் காலில் விழுந்து கதறல்


கணவர்-உறவினர்கள் அடித்து சித்ரவதை: காதல் திருமணம் செய்த பெண், கலெக்டரின் காலில் விழுந்து கதறல்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

கணவர், உறவினர்கள் அடித்து சித்ரவதை செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண் ஒருவர், கலெக்டர் ரோகிணியின் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரோகிணி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது, சேலம் குகை ஆறுமுகபிள்ளை தெருவை சேர்ந்த ஜூலி (வயது 27), என்பவர், கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதார். அவரிடம் கலெக்டர் ரோகிணி விசாரித்தபோது, கணவர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடித்து சித்ரவதை செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே, அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஜூலியை அடித்து சித்ரவதை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமிக்கு, கலெக்டர் ரோகிணி உடனடியாக உத்தரவிட்டார். இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்த ஜூலி கூறியதாவது:- சேலம் குகை பகுதியை சேர்ந்த ஒருவரை நான் காதலித்து 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கணவரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணத்திற்கு பின்பு இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை இறந்துவிட்டார்.

அப்போது ஈமச்சடங்கிற்காக எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, எனது கணவர் வீட்டில் இல்லை. அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர். அதன்பிறகு என்னுடன் குடும்பம் நடத்த கணவரை அழைத்தபோது, அவரும், அவரது உறவினர்களும் சேர்ந்து என்னை அடித்து சித்ரவதை செய்ததோடு, ஆபாசமாக பேசி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். இதனால் நியாயம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். அடித்து சித்ரவதை செய்த கணவர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காதல் திருமணம் செய்த இளம்பெண், கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story