ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபரை கொன்ற வழக்கில் திருநங்கை கைது


ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபரை கொன்ற வழக்கில் திருநங்கை கைது
x
தினத்தந்தி 6 Feb 2018 4:30 AM IST (Updated: 6 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபரை கொன்ற வழக்கில் திருநங்கை சுவேதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம்,

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் கலும் சத்யநாராயணா(வயது 30). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த காரம்வீரபாபு உள்பட 4 பேருடன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதற்காக பொகாரோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். இந்த ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே சென்ற போது கலும் சத்யநாராயணா, காரம்வீரபாபு ஆகிய இருவரும் படிக்கட்டின் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த திருநங்கைகள் அவர்களிடம் பிச்சை கேட்டனர். இதற்கு அவர்கள் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் கலும்சத்யநாராயணாவை தாக்கியதுடன் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காரம்வீரபாபு படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கலும்சத்யநாராயணாவை ரெயிலில் இருந்து கீழே தள்ளியது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த திருநங்கை சுவேதா(36) உள்பட சில திருநங்கைகள் என்பது தெரியவந்தது. இதனிடையே போலீசார் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்ததாக கூறப்படும் சுவேதா திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், சுவேதா விஷம் குடித்ததாக நாடகமாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவரை ரெயில்வே போலீசார் நேற்று மாலை சேலம் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு சண்முகபிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சுவேதா சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதையொட்டி கோர்ட்டுக்கு ஏராளமான திருநங்கைகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story