‘காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருக பா.ஜ.க.தான் காரணம்’ மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு


‘காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருக பா.ஜ.க.தான் காரணம்’ மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:45 AM IST (Updated: 6 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

‘காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகுவதற்கு காரணமே பா.ஜ.க.தான்’ என்று மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

கிருஷ்ணகிரி,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர், கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு சென்று அங்குள்ள மதகில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பர்கூர் வந்த மு.க.ஸ்டாலின் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கே.ஆர்.பி. அணையை சீரமைத்து விட்டதாக தற்போது அரசு கூறினாலும், அணையில் உள்ள 8 மதகுகளும் இப்போதும் பழுதடைந்த நிலையில் தான் தற்காலிகமாக செயல்படுவதாக உள்ளன. எனவே, உடனடியாக நிர்வாக ரீதியிலான நடவடிக்கையை எடுத்து, அந்த 8 மதகுகளையும் சீர்செய்து, புதுப்பிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கழிவுநீர் அணையில் கலப்பதாகவும், அதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இப்பகுதி மக்கள் என்னிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். எனவே, அணைக்கு வரும் கழிவுநீரை சுத்திகரிக்க, முகத்துவாரத்தில் ஒரு திட்டத்தை உடனே உருவாக்க வேண்டும், என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளி த்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும்போது, காவிரியில் நீர்வராமல் இருப்பதற்கு தி.மு.க.வும், காங்கிரசும் தான் காரணம் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டுகிறாரே?.

பதில்:- இப்படியெல்லாம் பேட்டி தருவதற்கு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகுவதற்கு காரணமே பா.ஜ.க. ஆட்சிதான். ஏனென்றால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்திருந்தால், இந்தப் பிரச்சினையே நிச்சயம் வந்திருக்காது. பா.ஜ.க. அரசு அதில் அலட்சியம் காட்டி வருவதால்தான், காவிரி டெல்டா பகுதியில் இப்படிப்பட்ட கொடுமையான நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம், தமிழிசை சவுந்தரராஜன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- கெமிக்கல் கலந்த நீர் அதிகமாக வந்ததால் கே.ஆர்.பி. அணையின் மதகு உடைந்ததாக அமைச்சர் சொல்லும் நிலையில், துருபிடித்திருந்த மதகை முறையாக புனரமைக்காத காரணத்தால் உடைந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்களே?.

பதில்:- அந்த அமைச்சர் சொன்னது போல அதிகளவு ரசாயனம் கலந்த நீர் வந்திருக்கும் என்றால், இந்நேரத்தில் இங்குள்ள பயிர்கள் எல்லாம் கருகி போயிருக்க வேண்டும். எங்களுக்கு வந்துள்ள தகவல்களின்படி, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கழிவுநீரை அந்த மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு செய்த பிறகே இங்கு வருவதாக தெரியவருகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக 2 மாவட்ட மக்களுக்கும் முழுமையாக தண்ணீர் வழங்குவதாக தவறான தகவல் சொல்வது போலவே, அமைச்சர்கள் மட்டுமல்ல, முதல்-அமைச்சரே தவறான தகவல்களை சட்டமன்றத்தில் சொல்லி வருகிறார்.

கேள்வி:- அரசின் அலட்சியத்தால் இதுவரை 3 பேர் யானைகள் தாக்கி இறந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?.

பதில்:- சூலூரில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. அதனால் சமீபத்தில் 2 பேர் இறந்துள்ளனர். அந்தத் துறையின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அம்மா சாப்பிட்டார், அம்மா தூங்கினார்” என்று முன்பு சொன்னது போலவே, இப்போதும் மேடைகளில் பேசி வருகிறாரே தவிர, மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் கவலைப்படவில்லை.

கேள்வி:- அ.தி.மு.க. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறாரே?.

பதில்:- இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பது இதில் இருந்தே தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எல்லா துறைகளிலும் ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி, அதன்மூலமாக அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் பணம் கொடுத்து ஆட்சி நடத்துகிறார்களே தவிர, வேறு எதுபற்றியும் அவர்களுக்கு கவலையில்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), ஒய்.பிரகாஷ் (தளி), முருகன் (வேப்பனப்பள்ளி), முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமக்கவுண்டர் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story