தூத்துக்குடி–கொல்லம் இடையே பயணிகள் ரெயில் இயக்க பரிசீலனை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷரேஷ்தா நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி முதல் மதுரை வரை உள்ள ரெயில் தண்டவாளம், ரெயில் நிலையங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷரேஷ்தா நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். அவர், இங்குள்ள ரெயில் நிலையத்தில் இருக்கும் வசதிகள், ரெயில் பராமரிப்பு பணிமனை, ரெயில்வே குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.
பின்னர் ஆர்.கே.குல்ஷரேஷ்தா நிருபர்களிடம் கூறியதாவது:–
மதுரை கோட்டத்தில் வருடாந்திர ஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை–தூத்துக்குடி, மதுரை–நெல்லை–நாகர்கோவில், கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரெயில்பாதை அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில் தண்டவாளங்கள் பணி நடைபெறும் நேரத்தில், ரெயில் நிலையங்களும் மேம்படுத்தப்படும். தூத்துக்குடியில் கூடுதலாக ஒரு பிட்லைன் அமைக்கப்படுகிறது. அதே போன்று நாகர்கோவிலில் கூடுதலாக 2 பிட்லைன் அமைக்கப்பட உள்ளன.
தூத்துக்குடி–கொல்லம் இடையே ரெயில் இயக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அந்த வழித்தடத்தில் ரெயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு முடித்து உள்ளார். அதில் உரிய அனுமதி கிடைத்த பிறகு தூத்துக்குடி–கொல்லம் இடையே ரெயில் இயக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் ரெயில்கள் மணியாச்சி பைபாஸ் வழியாக இயக்குவது தொடர்பாக உரிய ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.