நீதிபதிகளை கண்டித்து பிரசாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கைது


நீதிபதிகளை கண்டித்து பிரசாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கைது
x
தினத்தந்தி 7 Feb 2018 4:00 AM IST (Updated: 7 Feb 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில், நீதிபதிகளை கண்டித்து பிரசாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் வைரமணி (வயது 62). ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. இவர், மின்வாரியத்தில் நடந்த ஊழல் குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உத்தமபாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், 2002-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து சுருளியாறு மின் நிலையத்துக்கு தண்ணீர் வரக்கூடிய ராட்சத குழாய் பராமரிப்பு பணியில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கினை விசாரித்த கோர்ட்டு, புகார் தொடர்பாக எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தது. மேலும் கோர்ட்டு நேரத்தை வீணடித்ததாக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக தேனி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வைரமணி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுமட்டுமின்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உத்தமபாளையம் கோர்ட்டில் தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க கோரி மனு கொடுத்துள்ளார்.

இதற்கிடையே நீதிபதிகள் மீது அவர் ஊழல் புகார் கூறி வந்தார். இதனை கண்டித்து, உத்தமபாளையத்தில் உண்ணாவிரதம் இருக்க அவருக்கு நாளை (வியாழக்கிழமை) போலீசார் அனுமதித்து இருந்தனர்.

இந்தநிலையில் உத்தமபாளையம், தேனியில் பணிபுரியும் 3 நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு பிளக்ஸ் பேனரை வைரமணி வைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார், அங்கு சென்று பிளக்ஸ் பேனரை அகற்றினர்.

மேலும் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்ததாக கூறி வைரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நாளை நடக்கிற உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கேட்டு, கூடலூர் பஸ்நிலையத்தில் தரையில் உட்கார்ந்து பொதுமக்களிடம் வைரமணி பிரசாரம் செய்தார். அனுமதியின்றி, பிரசாரத்தில் ஈடுபட்டதாக வைரமணியை போலீசார் கைது செய்தனர்.

நீதிபதிகளை கண்டித்து பிரசாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story