விருதுநகரில் குடியிருப்புக்கு பாதை கோரி ரெயில்வே பொதுமேலாளரை முற்றுகையிட்ட ஊழியர் குடும்பத்தினர்


விருதுநகரில் குடியிருப்புக்கு பாதை கோரி ரெயில்வே பொதுமேலாளரை முற்றுகையிட்ட ஊழியர் குடும்பத்தினர்
x
தினத்தந்தி 7 Feb 2018 4:30 AM IST (Updated: 7 Feb 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு ஆய்வுக்கு வந்த தெற்கு ரெயில்வே பொதுமேலாளரை தங்கள் குடியிருப்புக்கு பாதை அமைத்து தரக்கோரி ரெயில்வே ஊழியர் குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்,

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ ரேஷ்தா நேற்று தென்மாவட்ட ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, தட்டப்பாறை, கோவில்பட்டி ஆகிய ரெயில்நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மாலை சிறப்பு ஆய்வு ரெயிலில் விருதுநகர் ரெயில் நிலையம் வந்தார். அவருடன் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா மற்றும் தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் வந்தனர்.

விருதுநகர் ரெயில் நிலையத்தில் பயிற்சி நிலையம், பள்ளி, ரெயில்வே ஊழியர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் பொதுமேலாளர் ஆய்வு மேற்கொண்டார். ரெயில்வே தொழில்நுட்ப பிரிவையும் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த பயோ டாய்லட் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகளையும் அவர் நட்டார்.

ரெயில்வே ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் ரெயில்வே ஊழியர் குடும்பத்தினர் ரெயில் நிலையத்தில் கூடி இருந்தனர். அவர்கள் ரெயில்வே பொது மேலாளரை முற்றுகையிட்டு தங்கள் குடியிருப்புக்கு செல்லும் பாதை கோட்ட ரெயில்வே நிர்வாகத்தால் மூடப்பட்டு விட்டதால் தாங்கள் நகருக்குள் சென்று வர பெரும் சிரமப்படுவதாகவும், தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமப்படுவதாகவும் தெரிவித்ததுடன் விருதுநகரில் ரெயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை மூடப்பட்ட பாதையை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வேறு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரினர். அப்போது பொதுமேலாளருடன் இருந்த கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். முற்றுகையிட்ட ஊழியர் குடும்பத்தினருக்கு பொதுமேலாளர் எவ்வித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றார். முற்றுகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் வியாபார தொழிற்சங்கத்தினர், விருதுநகர் அரிமா சங்கத்தினர் ஆகியோர் விருதுநகர் ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி, குளிர்சாதன வசதியுடன் தங்கும் அறை, கிழக்கு பகுதியில் நுழைவு வாயில், குடிநீர், சுகாதார வசதி மேம்பாடு ஆகியவை செய்து தர வேண்டும் என்றும் காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயிலை விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக ராமேசுவரம், காரைக்குடிக்கு கூடுதல் ரெயில் வசதி செய்து தர வேண்டும் என்றும் விருதுநகரில் இருந்து சென்னைக்கு காமராஜர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்று கோரியும் மனு கொடுத்தனர். 

Next Story