தமிழக கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர், கருப்பு கொடி காட்டி போராட்டம்


தமிழக கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர், கருப்பு கொடி காட்டி போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2018 4:30 AM IST (Updated: 7 Feb 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில், தமிழக கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வு பணிக்காக நேற்று வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பாணிப்பட்டி, திம்மாபுரம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் கிருஷ்ணகிரி பயணியர் மாளிகைக்கு வந்தார். அப்போது சுங்கச்சாவடி அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ, தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி கோஷங்கள் இட்டு கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர செயலாளர் நவாப், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அமீன், மகளிரணி அமைப்பாளர் பரிதா நவாப், பர்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோவிந்தராசன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய கவர்னர், இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுமே செயல்படுத்த வேண்டும். மாநில உரிமைகளில் தலையிட்டு மாவட்டந்தோறும் ஆய்வு என்ற பெயரில் தமிழக அரசின் மாவட்ட அதிகாரிகளோடும், கலெக்டருடனும், போலீஸ் சூப்பிரண்டுடனும், பேசி மாநில சுயாட்சி உரிமைகளில் தலையிடுவது என்பது மிகப்பெரிய அக்கிரமமாகும். இதை தட்டி கேட்க மாநில அரசு மறுக்கிறது. ஒரு மாநிலத்தின் உரிமையில் கவர்னர் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்று அறிந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி, இன்றைய தினம் நாங்கள் கருப்பு கொடி காட்டி எங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story