சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி மையம் அமைத்ததில் ரூ.8 கோடி மோசடி


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி மையம் அமைத்ததில் ரூ.8 கோடி மோசடி
x
தினத்தந்தி 7 Feb 2018 3:45 AM IST (Updated: 7 Feb 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி மையம் அமைக்கப்பட்டதில் ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் இயக்குனர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சமீபத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் மட்டுமல்லாது தொலை தூர கல்வி மையங்கள் அமைத்ததிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும் அதற்கு காரணமான முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் தற்போதைய பதிவாளர் மணிவண்ணன் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புகார் கொடுக்கப்பட்ட 3-ம் நாள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள வீட்டில் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர், இறப்பதற்கு முன்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் விரிவான கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி மையம் அமைத்ததில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பெரியார் பல்கலைக்கழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொலை தூர கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் அவை மூடப்பட்டதும், அதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய சுமார் ரூ.8 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் குணசேகரன், தமிழ்துறை தலைவர் டாக்டர் மாதையன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவை சேர்ந்த ஜெயந்த் முரளி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு முதலே மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேலும் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முக்கிய ஆவணங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story