மணல் ஆலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டம்


மணல் ஆலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2018 4:15 AM IST (Updated: 7 Feb 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சியில் மணல் ஆலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சியில் அரிய மணல் ஆலை இயங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் ஒரே பொதுத்துறை நிறுவனம் ஆகும். இங்கு 70 அதிகாரிகள், 192 தொழிலாளர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இங்கு மணல் எடுக்கும் உரிமம் மற்றும் போக்குவரத்து அனுமதியை புதுப்பிக்காததால், ஆலைக்கு கடந்த சில நாட்களாக மூலப்பொருட்கள் எடுக்க முடியாமல், ஆலையை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அரிய மணல் ஆலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி, மணவாளக்குறிச்சியில் உள்ள மணல் ஆலை முன் நேற்று மாலை தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இதற்கு குமரி மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்க, சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். பி.எம்.எஸ். பொதுச்செயலாளர் கருணாகரன் வரவேற்று பேசினார்.

இதில் தொ.மு.ச. செயலாளர் இளங்கோ, ஆலை தலைவர் உதயகுமார், பி.எம்.எஸ். மாநில பொதுச்செயலாளர் முருகேசன், எச்.எம்.எஸ். மாநில செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய சுற்றுச்சூழல் துறையின் உரிமத்தை புதுப்பித்து ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


Next Story