தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் சராசரி அளவு மகசூல் எக்டேருக்கு 5 டன் கிடைக்கிறது


தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் சராசரி அளவு மகசூல் எக்டேருக்கு 5 டன் கிடைக்கிறது
x
தினத்தந்தி 7 Feb 2018 4:15 AM IST (Updated: 7 Feb 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியில் சராசரி அளவு மகசூலான எக்டேருக்கு 5 டன் வரை கிடைக்கிறது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். வழக்கமாக டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. இதையடுத்து தாமதமாக கடந்த அக்டோபர் மாதம் 2-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை அக்டோபர் 5-ந்தேதி காலை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

குறுவை சாகுபடி 33 ஆயிரம் எக்டேர் பரப்பளவு நடந்தது. அதுவும் ஆழ்துளை கிணறு மூலம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 368 எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நடவு செய்யப்பட்ட முன்பட்ட சம்பா நெல் அறுவடை பணிகள் முடிவடைந்து விட்டன. ஆற்றுபாசனத்தை நம்பி நடவுசெய்யப்பட்ட வயல்களில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 38 ஆயிரம் எக்டேர் வரை அறுவடை பணிகள் நடைபெற்றுள்ளன. நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் கொள்முதல் செய்வதற்கு அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளன. தஞ்சை மண்டலத்தில் 155-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி நடைபெற்றது. அதிலும் மகசூல் மிகவும் குறைந்தது. எக்டேருக்கு 1½ டன் முதல் 2 டன் வரை தான் மகசூல் கிடைத்தது. தஞ்சை மாவட்டத்தில் சராசரியாக 5 முதல் 5½ டன் வரை எக்டேருக்கு மகசூல் கிடைக்கும். தற்போது மகசூல் சராசரியாக எக்டேருக்கு 5 டன் கிடைத்து வருகிறது.

இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மதியழகனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை சராசரியாக எக்டேருக்கு 5 டன் மகசூல் கிடைத்துள்ளது. இன்னும் அறுவடைப்பணிகள் நடைபெற வேண்டி உள்ளதால் சராசரியின் மகசூல் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக எக்டேருக்கு 8 ஆயிரத்து 600 கிலோவும், குறைந்த பட்சமாக 4 ஆயிரத்து 800 கிலோவும் கிடைத்துள்ளது”என்றார். 

Next Story