கும்மிடிப்பூண்டி அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2018 4:30 AM IST (Updated: 7 Feb 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் என்.எஸ்.நகரில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது52). இவரது மனைவி லதா(45). இவர்களுக்கு மகேந்திரன்(28) என்ற மகனும், நிரேஷா(25) என்ற மகளும் உள்ளனர்.

சீனிவாசலு தனது வீட்டில் 3 தறிகளை சொந்தமாக வைத்து நெசவு தொழில் செய்துவந்தார். வீட்டில் நேற்று மாலை சீனிவாசலு மற்றும் அவரது மனைவி லதா மட்டுமே இருந்தனர்.

அப்போது சீனிவாசலு வீட்டில் இருந்து அலறல் சத்தத்துடன் புகை வெளியே வந்துகொண்டிருந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரது வீட்டுக்கு ஓடிச்சென்றனர். ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.

வீட்டிற்குள் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் கணவன், மனைவி இருவரும் துடித்துக் கொண்டிருந்தனர். தீயை அணைக்க முற்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். வீட்டிற்குள் மண்எண்ணெய் சிதறிய நிலையில் 5 லிட்டர் மண்எண்ணெய் கேன் ஒன்றும் கீழே கிடந்தது. கதவை பூட்டிக்கொண்டு கணவன்-மனைவி இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story