தலையில் கல்லை போட்டு பேப்பர் பொறுக்கும் தொழிலாளி படுகொலை


தலையில் கல்லை போட்டு பேப்பர் பொறுக்கும் தொழிலாளி படுகொலை
x
தினத்தந்தி 7 Feb 2018 5:01 AM IST (Updated: 7 Feb 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

தலையில் கல்லை போட்டு பேப்பர் பொறுக்கும் தொழிலாளி படுகொலை எல்லைத் தகராறு காரணமா? போலீஸ் விசாரணை

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற அழுக்கு ஜெயக்குமார் (வயது 45). இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இரவு நேரங்களில் பிளாட்பாரங்களிலேயே படுத்து தூங்கிவிடுவார்.

நேற்று காலையில் கே.கே.நகர் அண்ணா நெடுஞ்சாலை பகுதியில் அழுக்கு ஜெயக்குமார் கொடூரமாக தலையில் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்தப்பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இதுபற்றி கே.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

ஜெயக்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்த நபர்கள் யார்? என்பது தெரியவில்லை. பேப்பர் பொறுக்கும் தொழிலாளர்கள் பொதுவாக அவர்களுக்குள் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அந்தப்பகுதிகளில்தான் பேப்பர் பொறுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்களாம். ஒருவர் எல்லைக்குள் இன்னொருவர் போய் பேப்பர் பொறுக்கக்கூடாது. ஜெயக்குமார் அவரது எல்லையை தாண்டி வந்து பேப்பர் பொறுக்கியதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அந்தப்பகுதியில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளர்கள் சிலரை பிடித்து ஜெயக்குமார் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story