சென்னை அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனை 75 ரவுடிகள் துப்பாக்கிமுனையில் பிடிபட்டனர்


சென்னை அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனை  75 ரவுடிகள் துப்பாக்கிமுனையில் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 7 Feb 2018 5:00 AM IST (Updated: 7 Feb 2018 9:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனை 75 ரவுடிகள் துப்பாக்கிமுனையில் பிடிபட்டனர். #TNnews

சென்னை,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் நேற்று முன்தினம் மாலை மத்திய குற்றப்பிரிவு ரவுடி ஒழிப்புத்துறை துணை கமி‌ஷனர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் ரவுடி பல்லு மதன் என்பதும், அவரது மோட்டார்சைக்கிளில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதும் தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர், ‘பூந்தமல்லி அருகே உள்ள வேலு லாரி செட்டில் பிரபல ரவுடி பினுவுக்கு பிறந்தநாள் கொண்டாட உள்ளோம். அதில் கலந்துகொள்ள செல்கிறேன். அந்த விழாவில் சென்னையில் உள்ள முக்கிய ரவுடிகள் பலரும் கலந்துகொள்கின்றனர். எங்களின் முக்கிய தலைவரும் கலந்துகொள்கிறார் என தெரிவித்தார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தெரிவித்தனர். அவர், ஒரே இடத்தில் அனைத்து ரவுடிகளும் கூடுவதால் அந்த ரவுடி கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மேற்கு மண்டல இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார் மேற்பார்வையில் அம்பத்தூர் துணை கமி‌ஷனர் சர்வேஷ்ராஜ், உதவி கமி‌ஷனர்கள் கண்ணன், ஆல்பிரட் வில்சன், நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சங்கர் நாராயணன் உள்பட 10 பேர், 15 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 40 போலீசார் கொண்ட குழுவினர் மாறுவேடத்திலும், சீருடையிலும் ரவுடிகள் கூடும் இடம் எங்கே? என்று பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள லாரி செட்களில் தீவிரமாக தேடினர்.

அப்போது மாங்காடு அருகே வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சர்வீஸ் சாலையோரம் வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வேலு லாரி செட்டை கண்டுபிடித்தனர்.

அங்கு ரவுடிகள் கூடுவதையும் உறுதிப்படுத்தினர். இரவு 9 மணி முதல் ஏராளமான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்களில் அந்த இடத்துக்கு ரவுடிகள் வந்து குவியத்தொடங்கினார்கள். சுமார் 150–க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கு திரண்டனர்.

அப்போது அவர்களின் தலைவனான பிரபல ரவுடி பினு (வயது 45) மற்றும் அவரது முக்கிய கூட்டாளிகளான கனகு என்கிற கனகராஜ், விக்கி என்கிற விக்னேஷ் ஆகியோர் அங்கு வந்தனர். பிறந்த நாள் கொண்டாடும் ரவுடி பினுவுக்கு அவரது கூட்டாளிகள் ஆளுயர மாலை அணிவித்து, வாணவேடிக்கையுடன் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

பிறந்தநாள் விழாவில் பினு தனது ராசியான அரிவாளால் கேக் வெட்டி, அவரது கூட்டாளிகளுக்கு ஊட்டிவிட்டார். பின்னர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அவரது கூட்டாளிகள் செல்போனில் படம்பிடித்து வைத்துக்கொண்டனர்.

சிறிது நேரத்தில் அங்கு மது விருந்து தொடங்கியது. இதில் கலந்துகொண்ட ரவுடிகள் மது போதையில், ‘‘நமது தலைவன் வந்துவிட்டார். இனி நமக்கு கவலை இல்லை’’ என்று பாட்டுப்பாடி அரிவாளை தலைக்கு மேல் உயர்த்தி சுழற்றியபடி நடனம் ஆடினர்.

இந்த தருணத்திற்காக காத்திருந்த போலீசார் கார்களில் அந்த இடத்துக்கு விரைந்துவந்து துப்பாக்கிமுனையில் ரவுடிகளை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் கூடியிருந்த ரவுடிகள், அவர்களின் ரகசிய சொல்லான ‘‘தடி வர்ரான்’’ என்று கூறியபடி அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். பினு, கனகு, விக்கி ஆகியோரும் மோட்டார்சைக்கிளில் குறுகிய பாதைகள் வழியாக தப்பிச் சென்றுவிட்டனர்.

ஆனால் போலீசார் கார்களில் வந்ததால் அவர்களை விரட்டிப்பிடிக்க முடியவில்லை. மேலும் சிலர் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு அருகில் இருந்த கால்வாய், முட்புதர்களுக்குள் புகுந்து தப்பி ஓடினார்கள். சிலர் போதை தலைக்கு ஏறியதால் ஓடமுடியாமல் அப்படியே நின்றுவிட்டனர்.

தப்பி ஓடிய சில ரவுடிகள் அருகில் வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருடன் இணைந்து முட்புதர்களில் மறைந்து இருந்த 10–க்கும் மேற்பட்ட ரவுடிகளை பிடிக்க உதவி செய்தனர்.

கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் உதவியுடன் விடிய, விடிய தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு தொடங்கிய தேடுதல் வேட்டை அதிகாலை 5 மணி வரை நீடித்தது. இதில் சுமார் 75 ரவுடிகளை போலீசார் ஒரே நாளில் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர்.

கைதான ரவுடிகள் அனைவரும் பூந்தமல்லி, போரூர், மாங்காடு ஆகிய போலீஸ் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 45 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள், 1 ஆட்டோ, 17 அரிவாள், கத்திகள், 60 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களில் ரவுடிகள் டெனி, தீனா என்ற தீனதயாளன், காமேஷ்வரன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைதான 75 பேர் மீதும் எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோ அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அதன்படி புளியந்தோப்புக்கு 5, அம்பத்தூருக்கு 7, அண்ணா நகருக்கு 18, சூளைமேடு மற்றும் ராயப்பேட்டைக்கு 13, தியாகராய நகருக்கு 3, மாதவரத்துக்கு 4, திருவல்லிக்கேணிக்கு 9, கீழ்ப்பாக்கத்துக்கு 2, மயிலாப்பூருக்கு 2, காஞ்சீபுரத்துக்கு 2, பூந்தமல்லிக்கு 10 என மொத்தம் 75 பேரும் அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சினிமாவில் வருவதுபோல் சென்னையில் உள்ள ரவுடிகள் 100–க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றுதிரண்டு பிறந்தநாள் விழா கொண்டாடியபோது துப்பாக்கிமுனையில் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார், உதவி கமி‌ஷனர் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ரவுடிகள் பிறந்தநாள் விழா கொண்டாட ஒன்றுகூடுவதாக தகவல் கிடைத்த உடன் உடனடியாக 3 உதவி கமி‌ஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைத்தோம். ரவுடிகள் அனைவரும் இரவு 9 மணிக்கு கூடியதும் அவர்களை சுற்றிவளைத்தோம். அதிகாலை வரை பதுங்கியவர்களை தேடி பிடித்தோம்.

இவர்களில் பலர் மீது நீதிமன்ற பிடிவாரண்டும் உள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே அனைத்து விவரங்களும் தெரியவரும். சென்னையில் 995 ரவுடிகள் உள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தொடரும். பிடிபட்ட வாகனங்கள் சிலவற்றில் வக்கீல், ஊடகம் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் அனைவரும் எப்படி தொடர்புகொண்டு இந்த இடத்தில் ஒன்றுகூடினார்கள்? என்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் அழைப்புகளை வைத்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளோம். தப்பியவர்களை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட வாகனங்களில் திருட்டு வாகனங்கள் ஏதும் உள்ளதா? என்றும் விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மழைநீர் கால்வாய்க்குள் குதித்து சிலர் தப்பி சென்றுவிட்டனர். அவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story