டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: குமரி மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: குமரி மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 8 Feb 2018 1:29 AM GMT (Updated: 8 Feb 2018 1:29 AM GMT)

வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை குமரி மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்கான வினாத்தாள்கள் மாவட்ட கருவூலத்துக்கு வந்து சேர்ந்தன.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என 8 வகையான காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குழித்துறை, தக்கலை, தோவாளை ஆகிய 5 பகுதிகளில் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வை குமரி மாவட்டத்தை சேர்ந்த 55,523 பேர் எழுத உள்ளனர். இதற்காக 104 பள்ளி, கல்லூரிகளில் 174 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 19 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 22 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக 111 வீடியோ கிராபர்கள் பணி அமர்த்தப் பட்டுள்ளனர்.

தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

1000 பேருக்கு மேல் தேர்வு எழுதும் இடங்கள் பதற்றம் நிறைந்த மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள நாகர்கோவில், தக்கலை, குழித்துறை பகுதிகளில் உள்ள 7 பள்ளி- கல்லூரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வுப்பணியில் தேவையான பணியாளர்கள் நியமிக் கப்பட உள்ளனர். கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ மற்றும் கூடுதல் கலெக்டர், உதவி கலெக்டர், துணை கலெக்டர் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.

தேர்வுக்கான வினாத்தாள்கள், விடைத்தாள்கள், வருகைப்பதிவேடு புத்தகங்கள் உள்ளிட்டவை நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தன. அவை மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ முன்னிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டதோடு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

Next Story