வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின


வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 8 Feb 2018 2:16 AM GMT (Updated: 8 Feb 2018 2:16 AM GMT)

அரியலூர் மாவட்டங்களில் வருவாய்த்துறை யினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 7-ந்தேதிவிடுப்பு எடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யிலான போராட்டம் நடத்தப்போவதாக அறிவித் திருந்தனர்.

அதன்படி, நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள வருவாய்த்துறை அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றிய வருவாய்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப் பட்டன.

இந்த போராட்டத்தால் பட்டா மாற்றம் செய்வது, புதிய வீட்டுமனை பட்டா வழங்குவது உள்ளிட்ட அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த போராட்டம் குறித்து அறியாமல் பொதுமக்கள் பலரும் வருவாய்துறை அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. 100-க்கும் மேற்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டம் தொடரும் எனவும் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகாராஜ் தெரிவித்தார்.

இதேபோல் அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 132 பேர் விடுப்பு எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்காக வருமான சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்குமா என பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

Next Story