மாவட்ட செய்திகள்

வருவாய் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின + "||" + Revenue departments have struck off the offices of coincidence

வருவாய் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின

வருவாய் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
தர்மபுரி,

வருவாய்த்துறை ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்த்துறையை சேர்ந்த தாசில்தார்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர். துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 312 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் காரணமாக தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள், மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி நேற்று வெறிச்சோடின. வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு வகையான சான்றிதழ்களை பெறுவதற்காக தாலுகா அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் திரும்பி சென்றனர். இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என மாவட்டம் முழுவதும் 300 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.