வாகனம் மோதி மீனவர் பலியான சம்பவம்: டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்


வாகனம் மோதி மீனவர் பலியான சம்பவம்: டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

வாகனம் மோதி மீனவர் பலியான சம்பவத்தில், சம்பந்தப்பட்ட டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் பெரியாண்டவன். இவரது மகன் சரண் (வயது 23). மீனவர். இவர் கத்தார் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சொந்தவேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கடலூர் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

கடலூர் சிப்காட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சரண் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த சரணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும், சிப்காட் பகுதியில் விபத்து நடந்த இடத்தில் நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டறிந்து, அதன் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர்கள் கடலூர் முதுநகர் ஆண்டவர், புதுநகர் சரவணன், திருப்பாதிரிப்புலியூர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்துக்கு காரணமான வாகனத்தின் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், அப்போது தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர்.

அப்போது, போலீசார் விபத்து தொடர்பாக நீங்கள் முறைப்படி புகார் செய்தால் தான், நாங்கள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இதுவரை நீங்கள் புகார் ஏதும் தரவில்லை. எனவே புகார் அளியுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் செய்யாமல் அனைவரும் கலைந்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் அனைவரும் நாலாபுறம் கலைந்து ஓடினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் பிடித்து முதுநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் சம்பவ இடத்துக்கு வந்து சரணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது விபத்து குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து, புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் போலீசாரை அரசு பணிசெய்ய விடாமல் தடுத்து, திட்டியதாக குகன், செல்மணி, நவீனன் ஆகியோர் மீது முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story