‘ஊழலை சரிசெய்ய விரும்புபவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும்’ ராகவா லாரன்ஸ் பேட்டி


‘ஊழலை சரிசெய்ய விரும்புபவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும்’ ராகவா லாரன்ஸ் பேட்டி
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

‘ஊழலை சரிசெய்ய விரும்புபவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும்’ என்று சேலத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.

சேலம்,

சேலத்தில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தின் போது அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது17) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து யோகேஸ்வரன் குடும்பத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவருடைய குடும்பத்தினர், என் மகன் இருந்திருந்தால் உழைத்து தங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பான் என ராகவா லாரன்சிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து யோகேஸ்வரன் குடும்பத்தினருக்கு நிலம் வாங்கி ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.23 லட்சம் ஆகும்.

இந்தநிலையில் யோகேஸ்வரன் நினைவுநாளையொட்டி, புதிய வீட்டிற்கான சாவியை கொடுப்பதற்காக நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் இருந்து காரில் சேலம் வந்தார். பின்னர் அவர் யோகேஸ்வரன் குடும்பத்தினரிடம் புதிய வீட்டிற்கான சாவியை கொடுத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதற்கு மாணவர்கள், இளைஞர்கள் தான் முக்கிய காரணம். இந்த போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்தினை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும். யோகேஸ்வரன் குடும்பத்தில் மூத்த மகனாக இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். நான் தற்போது கட்டி கொடுத்து இருக்கும் இந்த வீடு, என்னுடைய பணத்தில் கட்டப்பட்டதல்ல, உங்கள் (ரசிகர்கள்) பணத்தில் கட்டி கொடுத்து இருக்கிறேன்.

ரஜினிகாந்துக்கு நான் காவலனாக இருப்பேன் என்றதால், அரசியலுக்கு ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவிக்கு எல்லாம் எனக்கு ஆசையில்லை. ரஜினிகாந்த் என்ன செய்தாலும் அவர் கூடவே இருப்பேன். ரஜினிகாந்திற்கு எதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றால், அவரால் தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன்.

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். எனது தாய்க்கு மகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். எனது தாயார் சொன்னால் நான் அரசியலுக்கு வருவேன். ஊழலை சரிசெய்ய விரும்புபவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும். அரசியலுக்கு, எந்த ஆசையும் இல்லாத மனிதர்கள் வந்தால் தான் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து ராகவா லாரன்சுக்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


Next Story