மாவட்ட செய்திகள்

பொக்காபுரம் பகுதியில் இறந்த குட்டியை விட்டு பிரியாமல் பாச போராட்டம் நடத்திய யானைகள் + "||" + Do not get away from the dead baby Elephants conducted by the struggle

பொக்காபுரம் பகுதியில் இறந்த குட்டியை விட்டு பிரியாமல் பாச போராட்டம் நடத்திய யானைகள்

பொக்காபுரம் பகுதியில் இறந்த குட்டியை விட்டு பிரியாமல் பாச போராட்டம் நடத்திய யானைகள்
பொக்காபுரம் பகுதியில் இறந்த குட்டி யானையின் உடலை விட்டு பிரிந்து செல்லாமல் 2 யானைகள் பாச போராட்டம் நடத்தின.
மசினகுடி,

நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்டது சிங்காரா வனச்சரகம். இந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகளையும், வனப்பகுதியையும் கண்காணிக்கும் பணியில் சிங்காரா வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் பொக்காபுரம் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சிங்காரா வனச்சரகர் காந்தன் உத்தரவின் பேரில் வனவர் பீட்டர் பாபு தலைமையில் வனகாப்பாளர் கணேஷ் உள்பட வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது. அதன் அருகே தாய் யானை உள்பட 2 யானைகள் நின்று கொண்டு இருந்தன.

இதை பார்த்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டு குட்டியானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்காக பட்டாசு வெடித்து அந்த 2 யானைகளையும் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த 2 யானைகளும் அங்கிருந்து செல்லாமல் பாச போராட்டம் நடத்தின.

இதையடுத்து வனத்துறையினர் இறந்து கிடந்த குட்டி யானையின் உடல் அருகே செல்ல முயன்றனர். ஆனால் அந்த 2 யானைகளும் நெருங்கவிடாமல் வனத்துறையினரை துரத்தின. யானைகளிடம் இருந்து தப்பிக்க வனத்துறையினர் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் மீண்டும் 2 யானைகளும் குட்டியின் உடல் அருகே சென்று நின்றன. மேலும், குட்டியின் உடலை சுற்றி வந்த தாய் யானை அதை துதிக்கையால் தட்டிக்கொடுத்தபடி நின்றது.

இதை பார்த்த வனத்துறையினர் மீண்டும் அந்த யானைகளை பட்டாசு வெடித்து, வாகனத்தின் மூலம் ஒலி எழுப்பி விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானைகள் வனத்துறையினரின் வாகனத்தை விரட்டி தாக்க முயன்றது. இதுபற்றி வனச்சரகர் காந்தனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நேரில் சென்று பார்த்தார். வனத்துறையினர் தொடர்ந்து போராடியும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த காட்டு யானைகள் குட்டியை விட்டு விலகி செல்லாமலும், அதன் அருகே யாரையும் நெருக்க விடாமலும் நின்று கொண்டு இருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாலை வரை போராடியும் காட்டுயானைகளை விரட்டி விட்டு குட்டி யானையின் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் இரவு நேரம் நெருங்கி விட்டதால் மேற்கொண்டு யானைகளை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.