டிஜிட்டல் மீட்டர் வழங்கப்படவில்லை: மின் இணைப்புக்காக காத்திருக்கும் புதிய வீடுகள்


டிஜிட்டல் மீட்டர் வழங்கப்படவில்லை: மின் இணைப்புக்காக காத்திருக்கும் புதிய வீடுகள்
x
தினத்தந்தி 8 Feb 2018 8:32 AM IST (Updated: 8 Feb 2018 8:32 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி என 4 மின்வாரிய கோட்ட நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி என 4 மின்வாரிய கோட்ட நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மின் கோட்டங்களுக்கு உட்பட்டு 23 துணை மின் நிலையங்கள் உள்ளன. சமீப காலமாக புதிய வீடுகள் கட்டுவோர் மின் இணைப்பு வேண்டி இந்த மின் நிலையங்களில் விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல வீடுகள் புதுமனை காண வேண்டிய நிலையில் மின் இணைப்பு இன்றி கிடப்பில் போட வேண்டிய நிலைமையில் பொதுமக்கள் உள்ளனர். மின்வாரிய அலுவலகங்களில் மின் மீட்டர்கள் தட்டுப்பாடு உள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

புது வீடுகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற மனு செய்தால், மின் மீட்டர்கள் கையிருப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மாவட்டத்தில் கடந்த மாதம் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த யாருக்கும் மின் மீட்டர்கள் இருப்பு இல்லாததால் இதுவரையிலும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதற்கிடையில் தற்போது மின் மீட்டர்கள் தட்டுப்பாட்டால் மின் இணைப்பு கிடைக்காமல் புதிய வீடு கட்டுவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மின் மீட்டர்கள் சேதமடைந்து, புதிய மின் மீட்டர்கள் கேட்டவர்களுக்கும் இதே நிலைமை தான்.

மணல் தட்டுப்பாட்டால் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில், மின் இணைப்பு வழங்கப்படாததால் மேலும் சில தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். மின்வாரியத்தின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின் மீட்டர் தட்டுப்பாடு குறித்து அரசு தெரிவித்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது மின்வாரியத்தின் கடமையாகும். ஆனால் அவர்கள் அதனை உணர்ந்து செயல்படுவது கிடையாது.

எனவே மின்வாரிய அதிகாரிகள் மாவட்டத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மின் மீட்டர்கள் இருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கடந்த ஆண்டை போன்று தனியார் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர்களே மின் மீட்டர்களை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Next Story