கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்


கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:02 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

கல்வி உதவித்தொகை வழங்க கோரி அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகரில் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை மூலம் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மெஸ்சிற்கு பணம் கட்டி வருகின்றனர். மேலும் கல்விக்காக செலவு செய்து கொள்வார்கள். இந்த உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்திற்குள் அரசு வழங்கி வருவது வழக்கம் ஆகும்.

ஆனால் இந்த ஆண்டு உதவித்தொகை இன்னும் வழங்கவில்லை என்று கூறி அந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி அருகே உள்ள ரவுண்டானாவை சுற்றி அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூற வேண்டும். இது போன்று மறியலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். அதன்பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

பின்னர் அங்கிருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாணவர்கள் வருவதை தொடர்ந்து போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாசல் கேட்டை பூட்டினர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் நுழைவு வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். அப்போது அவர்கள் கலெக்டரை சந்தித்து பேச வேண்டும் என்று கூறினர். அதற்கு மாணவர்கள் அனைவரும் செல்ல வேண்டாம். சிலர் மட்டும் செல்லுங்கள் என்று கூறினர். அதற்கு மாணவர்கள் மறுத்தனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. உள்ளே சென்று மாணவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் நாங்கள் தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அரசு வழங்கும் உதவித்தொகையை வைத்து தான் விடுதியில் உள்ள மெஸ்சுக்கு பணம் கட்ட வேண்டும். அதே போன்று ஊக்கத்தொகையை வைத்து தான் படிப்பிற்கு தேவையானவற்றை வாங்கி கொள்ள வேண்டி உள்ளது. இந்த நிலையில் இதுவரை உதவித்தொகை வழங்கவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று கூறினர். மேலும் உதவித்தொகை பெற ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. எனவே மாணவர்கள் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி இது குறித்து கலெக்டரிடம் எடுத்துக்கூறி 15 நாட்களுக்குள் மாணவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து மாணவர்களிடம் கேட்ட போது இளங்கலை படிப்பவர்களுக்கு கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து மொத்தம் வருடத்திற்கு ரூ.15 ஆயிரமும், முதுகலை படிப்பவர்களுக்கு ரூ.20,500-ம் அரசு வழங்கி வருகிறது. இதை வைத்து தான் படித்து வருகிறோம். இந்த ஆண்டு இதுவரை உதவித்தொகை அரசு வழங்காததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று கூறினர். இதனால் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story