அரசு பள்ளியில் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்ததால் பரபரப்பு


அரசு பள்ளியில் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 8:32 AM IST (Updated: 8 Feb 2018 8:32 AM IST)
t-max-icont-min-icon

ஆதனூர் அரசு பள்ளியில் மாணவிகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்துள்ள ஆதனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் செந்தில்குமார் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் மகேந்திரனை நேற்று முன்தினம் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கல்வி அதிகாரிகள் மாணவரை அடித்த ஆசிரியர் செந்தில்குமாரை நேற்று பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இப்பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கென தனி கழிவறை உள்ளது. அந்த கழிவறையை பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை வைத்தே தினமும் சுத்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சற்று நேரத்தில் ஆசிரியர்கள் கழிவறையை மாணவிகளை வைத்து சுத்தம் செய்துள்ளனர். இதை பார்த்த சிலர் செல்போனில் படம் எடுத்து அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஆசிரியர்கள் பள்ளிக்கு படிக்க வரும் மாணவ- மாணவிகளை கொண்டு கழிவறையை சுத்தம் செய்வது மிகவும் தவறான செயல் ஆகும். அது போன்று செய்யக் கூடாது. மீறி செய்தால் பள்ளி ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுகுறித்து ஆதனூர் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வாறு தெரியாமல் போனது என பொதுமக்கள் வேதனையுடன் கூறினர். மாணவிகளை கொண்டு கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் அவர்களது பெற்றோர் களை வருத்தமடைய செய்தது. இந்த பள்ளியில், கல்வி அதிகாரிகள் வந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்த நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியது மீண்டும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story