புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பக்கோடா, பஜ்ஜி விற்பனை செய்து போராட்டம்


புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பக்கோடா, பஜ்ஜி விற்பனை செய்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 9:30 AM IST (Updated: 8 Feb 2018 8:32 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பக்கோடா மற்றும் பஜ்ஜி தயாரித்து விற்பனை செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பக்கோடா மற்றும் பஜ்ஜி தயாரித்து விற்பனை செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தான் கலந்து கொண்ட ஒரு டி.வி. நிகழ்ச்சியில் வேலை இல்லா திண்டாட்டம் குறித்து பேசுகையில், ‘பக்கோடா’ விற்றாலே ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதற்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் பா.ஜனதா அலுவலகங்களின் முன்பு திரண்டு ‘பக்கோடா’ தயாரித்து விற்பனை செய்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காந்தி வீதி-நேரு வீதி சந்திப்பில் நேற்று பக்கோடா மற்றும் பஜ்ஜி தயாரித்து விற்பனை செய்யும் நூதன போராட்டம் நடந்தது. இதில் மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டம் மோடி அரசின் ஏமாற்று வேலை எனவும் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்திற்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் பட்டமளிப்பு விழா உடையுடன் நின்றுகொண்டு அடுப்பு மூட்டி பக்கோடா, பஜ்ஜி ஆகியவற்றை தயாரித்து அதற்கு மோடி பக்கோடா, மோடி பஜ்ஜி என கூவி கூவி விற்பனை செய்தனர்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பேன் என பிரதமர் மோடி அறிவித்தார். இதேபோல் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆட்சிக்கு வந்த பிறகு பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டன.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரி விதிப்பால் நாட்டின் உற்பத்தி, வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.

விவசாயிகள், மகளிர் மேம்பாடு மற்றும் அரசு ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் எதையும் செய்யவில்லை. அறிவித்தபடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவில்லை. நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி அடைந்தது. 2019-ல், ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார். இவ்வாறு அவர் பேசினார். 

Next Story