உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி உளுந்தூர்பேட்டையில், விவசாயிகள் சாலை மறியல்


உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி உளுந்தூர்பேட்டையில், விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Feb 2018 4:00 AM GMT (Updated: 8 Feb 2018 3:09 AM GMT)

உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது. உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த நெல், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட தானியங்களை அறுவடை செய்து இந்த விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து, விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நெல், உளுந்து மூட்டைகளின் வரத்து அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏராளமான விவசாயிகள் உளுந்து மற்றும் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

அவற்றை கொள்முதல் செய்த வியாபாரிகள், விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை என தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், பணப்பட்டுவாடா செய்யக்கோரி உளுந்தூர்பேட்டை- சென்னை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் உளுந்தூர்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசி பணப்பட்டு வாடா செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கான உளுந்து மற்றும் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது வியாபாரிகள் அதிகளவிலான உளுந்து வரத்து காரணமாக, 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உளுந்துக்கு அதிகபட்சமாக 4 ஆயிரத்து 300 ரூபாய் நிர்ணயித்து கொள்முதல் செய்ய தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், பக்கத்து ஊர்களில் ஒரு மூட்டை உளுந்து ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாவதாகவும், உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதிகாரிகள் துணையுடன் வியாபாரிகள் உளுந்து விலையை குறைத்து விற்பனைக்கு கேட்பதாகவும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள், முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உளுந்தூர்பேட்டை- சென்னை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், உடனடியாக உளுந்து விலையை உயர்த்த வேண்டும், கமிஷன் கேட்கும் புரோக்கர்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர்.இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட விவசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்ற விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் உளுந்தூர்பேட்டை- சென்னை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story