தூத்துக்குடி மாவட்ட பகுதிக்கு கூடுதல் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு


தூத்துக்குடி மாவட்ட பகுதிக்கு கூடுதல் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 8 Feb 2018 3:17 AM GMT (Updated: 8 Feb 2018 3:17 AM GMT)

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பகுதிக்கு கூடுதல் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் நிலை உள்ளது.

சாத்தூர்,

சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 2006-ம் ஆண்டிலேயே தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சீவலப்பேரி அருகே உறிஞ்சப்பட்டு சாத்தூருக்கு கொண்டுவரப்பட்டு வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது 4 ஆயிரத்து 750 குடிநீர் இணைப்புகள் உள்ளன.

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய தண்ணீர் பெற தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரனும் கடந்த ஆட்சியில் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரான ஆர்.பி.உதயகுமாரும் இதில் தனிக்கவனம் செலுத்தி வந்தனர். ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு குறைந்து வருகிறது. தற்போது 13 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு குறைந்துவிட்டதால் தண்ணீர் விடும் இடைவெளி 4 நாட்களாக உயர்ந்து விட்டது. மேடான பகுதிகளில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வழங்கப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டினால் பெண்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்குள்ள எட்டயபுரம், கோவில்பட்டி மண்டித்தோப்பு, கழுகுமலை, நாலாட்டின்புத்தூர் பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் உறிஞ்சப்படுவதாலேயே சாத்தூருக்கு வரவேண்டிய தண்ணீர் குறைவாக வருவதாக கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதற்கு துணை போவதாகவும் கூறப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் கோடையில் சாத்தூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுப்பிரமணியன் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லாத சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story