மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி + "||" + bull hit oyung man dead in jallikattu

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி
திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் மாடுபிடிவீரர் பலியானார். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோபால்பட்டி,

திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டி புனித செபஸ்தியார், புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக வாடிவாசல், கேலரி அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.


திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் கற்பகம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு சீருடை கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு அடிபடாமல் இருக்க தேங்காய் நார் மைதானம் முழுவதும் பரப்பப்பட்டு இருந்தது.

பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. திண்டுக்கல், நத்தம், திருச்சி, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த 301 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக காளைகளுக்கு கால்நடை உதவி இயக்குனர் சுப்பையாபாண்டியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர்.

களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 480 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 420 பேர் மட்டுமே காளைகளை அடக்க அனு மதிக்கப்பட்டனர். காளைகளை அடக்க காளையர்கள் முண்டியடித்தனர். வீரர்களின் பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளிக்குதித்தன. சில காளைகள் மாடுபிடி வீரர் களை தன் பக்கத்தில் நெருங்கவிடமால் பயமுறுத்தியது.

இருப்பினும் வீரர்கள் சளைக்காமல் காளைகளுடன் மல்லுக்கட்டினர். மேலும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இடையிடையே பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், தங்க நாணயம், வெள்ளி நாணயம், செல்போன், ஆட்டுக்கிடா உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

பரபரப்பாக நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஆட்டோடிரைவர் ஆரோக்கியபவுல்ராஜ் (வயது 30), புகையிலைப்பட்டி எமிரிடன் (18), சாணார்பட்டியை சேர்ந்த அருண்ரஷித் (20), நத்தம்கோவில்பட்டி ராம்குமார் (20) மற்றும் பார்வையாளர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கியபவுல்ராஜ், எமிரிடன், அருண்ரஷித், ராம்குமார் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோக்கிய பவுல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.