பட்டாசு வெடித்ததை கண்டித்ததால் அம்மன் தேரை நடுரோட்டில் நிறுத்தி பக்தர்கள் போராட்டம்


பட்டாசு வெடித்ததை கண்டித்ததால் அம்மன் தேரை நடுரோட்டில் நிறுத்தி பக்தர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:35 AM GMT (Updated: 8 Feb 2018 3:35 AM GMT)

கடையத்தில் பட்டாசு வெடித்ததை கண்டித்ததால் பக்தர்கள் அம்மன் தேரை நடுரோட்டில் நிறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடையம்,

நெல்லை மாவட்டம் தெற்கு கடையத்தில் அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோவில் மற்றும் கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் தைத்திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் முப்புடாதி அம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை ரத வீதியில் இழுத்து வந்தனர்.

இதேப்போல் கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோவிலிலும் நேற்று முன்தினம் இரவு அம்மன் தேர் வீதிஉலா நடைபெற்றது. நேற்று அதிகாலை தெற்கு கடையம் விநாயகர் கோவில் முன்பு முப்புடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடையம், கீழக்கடையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பட்டாசு வெடித்தனர். இதையடுத்து பத்திரகாளி அம்மன் தேர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடையம் போலீசார், பக்தர்கள் பட்டாசு வெடித்ததை கண்டித்தனர். மேலும் பக்தர்கள் 2 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த முப்புடாதி அம்மன் பக்தர்கள், அம்மன் தேரை நடுரோட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், தாங்கள் பிடித்து சென்ற 2 பேரையும் விடுவித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் கலைந்து சென்று தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். 

Next Story