வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை: என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் கைது


வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை: என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 5:11 AM GMT (Updated: 8 Feb 2018 5:11 AM GMT)

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக எதிர்வீட்டு எனஜினீயரிங் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அருகே உள்ள ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவரது மனைவி தீபா(வயது 38). இவர்களுக்கு ஹரிபிரசாத்(15) என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் அய்யங்குட்டிபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஷிப்ட் முறையில் வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரபுதாஸ் வேலைக்கு சென்று விட்டார். ஹரிபிரசாத் பள்ளிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தீபா மதியம் 2 மணி ஆகியும் வேலைக்கு செல்லவில்லை. எனவே இதனால் சந்தேகம் அடைந்த பிரபுதாஸ் வீட்டிற்கு வந்து பார்த்த போது தீபா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ரெட்டியாபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தீபா வீட்டின் எதிர்வீட்டை சேர்ந்த கிரிதரன்(25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது வலது கை மோதிர விரல் மற்றும் முக்கின் மேல் காயம் இருந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தீபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் கிரிதரனை கைது செய்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த நான் பி.டெக். படித்துள்ளேன். எனக்கு காயத்ரி என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் தீபா குடியிருந்த வீட்டின் எதிரே உள்ள வீட்டில் நாங்கள் குடியேறினோம். தீபா குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்தோம். நான் பங்கு மார்க்கெட்டில் பங்குகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தேன். வீட்டில் இருந்த படியே ஆன்-லைன் மூலம் கம்ப்யூட்டரில் இந்த தொழிலை செய்து வந்தேன்.

சமீப காலமாக நான் முதலீடு செய்த சேர் மார்க்கெட் லாபகரமாக செல்லவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக அளவில் பண முடக்கம் ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் பணத்திற்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் எந்த வழியிலும் பணம் கிடைக்கவில்லை. தீபா வீட்டில் அதிக அளவில் நகைகள் இருப்பது எனக்கு தெரியும். எனவே அவரது வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடலாம் என்று நினைத்தேன்.

பிரபுதாஸ் வேலைக்கு சென்ற பின்னர் தீபா கார் டிரைவிங் பயிற்சிக்கு செல்வது வழக்கம். அப்போது அவர் வீட்டு சாவியை வீட்டின் முன்பு கிடக்கும் மேட்டின் அடியில் வைத்து செல்வது வழக்கம். இதேபோல் கடந்த மாதம் அவர் வெளியே சென்ற பின்னர் வீட்டு சாவியை எடுத்து வீட்டில் இருந்த 1½ பவுன் நகையை திருடி விற்பனை செய்தேன். அப்போது தீபாவின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டு என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம், பிரபுதாசின் தாயார் தான் அங்கு வந்து சென்றார் என்று கூறினேன். அதன் பின்னர் அவர்கள் போலீசில் புகார் செய்யாமல் விட்டனர்.

இந்த நிலையில் எனது மனைவி குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக 15 நாட்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். நான் மட்டும்தான் தனியாக இருந்தேன். எனவே பங்கு மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க தீபாவின் வீட்டில் மீண்டும் திருடலாம் என்று முடிவு செய்தேன். நேற்று முன்தினம் காலையில் தீபா தனது மகன் ஹரிபிரசாத்தை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவர் கார் டிரைவிங் படிக்க சென்றார். அப்போது வீட்டின் முன்பு கிடந்த மேட்டின் அடியில் இருந்த வீட்டு சாவியை எடுத்து உள்ளே சென்றேன்.

அங்கு பீரோ சாவியை காணவில்லை. அதனை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக தீபா வீட்டிற்கு வந்து விட்டார். உடனே அவர் ஏன் வீட்டிற்குள் வந்தாய் என்று கேட்டு கூச்சலிட்டார். இதனால் பயந்து போன நான் அவரது வாயை பொத்தினேன். அப்போது அவர் நான் யாரிடமும் சொல்லமாட்டேன் என்னை விட்டுவிடு என்று கெஞ்சினார். ஆனால் அவரை உயிரோடு விட்டால், நான் வீடுபுகுந்து திருட முயன்றதை காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயம் ஏற்பட்டது. எனவே அங்கு இருந்த டி.வி.டி. பிளேயரை எடுத்து அவரது தலையில் அடித்தேன். இதில் மயங்கிய அவரது தாலிக்கயிற்றை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் தடயங்களை மறைக்க மிளகாய் பொடியை வீடு முழுவதும் தூவி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று குப்பை தொட்டியில் வீசினேன். பின்னர் ரத்தக்கறை படிந்த ஆடைகளை துவைத்துவிட்டு வில்லியனூர் சென்றேன். கொலை செய்தது நான்தான் என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று கருதி மாலையில் வீடு திரும்பினேன். அப்போது போலீசார் என்னை அழைத்து விசாரணை செய்தனர். பின்னர் நான் கொலையாளி என்பதை அவர்கள் கண்டு பிடித்து என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட தீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story