2–வது நாளாக வேலைநிறுத்தம்: தீப்பெட்டி தொழிலாளர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


2–வது நாளாக வேலைநிறுத்தம்: தீப்பெட்டி தொழிலாளர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 9 Feb 2018 3:00 AM IST (Updated: 9 Feb 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல லட்சம் ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

சம்பள உயர்வு கோரிக்கை


கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், 200–க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே தங்களுக்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும். அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியினை பஞ்சப்படியுடன் சேர்த்து உடனடியாக பாக்கி தொகைகளுடன் வழங்க வேண்டும்.

பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தீப்பெட்டி நிறுவனங்களில் கேண்டீன், ஓய்வறை, குழந்தை பாதுகாப்பு அறை, கழிவறை வசதி செய்து தர வேண்டும். நேர அட்டை, சம்பளச் சீட்டு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இனாம் மணியாச்சி, மந்திதோப்பு பகுதிகளை சேர்ந்த ஏ.ஐ.டி.யு.சி. தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பல லட்சம் ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோவில்பட்டி இனாம் மணியாச்சி, மந்திதோப்பு, ஆவல்நத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் சரோஜா, பாபு, பரமராஜ், சேதுராமலிங்கம், கொம்பையா, துரைபாண்டி உள்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்று பேச்சுவார்த்தை

உதவி கலெக்டர் அனிதா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தொழிற்சாலை ஆய்வாளர், இ.எஸ்.ஐ. மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு போதிய சம்பள உயர்வு கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story