தமிழகத்தில் ரவுடிகள் அரிவாள் தூக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தமிழகத்தில் ரவுடிகள் அரிவாள் தூக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2018 4:30 AM IST (Updated: 9 Feb 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ரவுடிகள் அரிவாள் தூக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி,

மத்திய அரசு சிறந்த ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளது. இதனை பொறுத்து கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரதமரை பேச விடாமல் தடுத்துள்ளன. படித்த இளைஞர்கள் பக்கோடா விற்றால் கூட சம்பாதிக்க முடியும் என்று சுயதொழில் பற்றி பேசியதை எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்கிறார்கள்.

இளைஞர்கள் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரதமர் பேசியதை விமர்சனம் செய்வதாக நினைத்து கொண்டு பக்கோடா சுடுவதற்கு பதிலாக பஜ்ஜி சுடுகிறார். இன்று பஜ்ஜியும், பக்கோடாவும் சுடும் அளவுக்கு இந்தியா இருப்பதற்கு அவர்கள் தான் காரணம்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தற்போதைய பட்ஜெட்டை பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டே தாக்கல் செய்து இருக்கலாம் என கருத்து தெரிவித்து உள்ளார். கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி செய்த நிர்வாக சீர்கேட்டினால் தான் இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

எங்களை பொறுத்தவரை இது கடைசி பட்ஜெட் அல்ல. வளர்ச்சியின் முதல் பட்ஜெட். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள்? என்று கேட்கிறார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் தமிழகத்திலேயே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே மாதிரி தான் இந்தியா முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சென்னையில் ரவுடிகள் மனிதனை வெட்ட பயிற்சி பெறுவதுபோல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக்கை அரிவாளால் வெட்டி காட்டுகிறார்கள். காவல்துறையினர் ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்ததை பாராட்டுவதா அல்லது இவ்வளவு நாள் இந்த ரவுடிகளை சுதந்திரமாக விட்டு வைத்திருந்ததை குறை கூறுவதா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் ரவுடிகள் அரிவாள் தூக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முதல்-அமைச்சர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story