லாரி உரிமையாளரை மிரட்டி ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு கைது


லாரி உரிமையாளரை மிரட்டி ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
x
தினத்தந்தி 9 Feb 2018 4:45 AM IST (Updated: 9 Feb 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

மணல் லாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டரும் கைதானார்.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம்ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 41). இவர் 6 டிப்பர் லாரிகள் வைத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகள் தொடங்கப்பட்டபின் அதில் மணல் எடுக்க பதிவு செய்து மணல் அள்ளி விற்பனை செய்து வந்துள்ளார். தற்போது அரசு மணல் குவாரிகள் இல்லாததால் மணல் எடுப்பதை கைவிட்டு செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன், பன்னீர்செல்வத்தை அழைத்தார். “முன்பு போல் நீங்கள் லாரியில் மணல் எடுக்கலாம். அதற்கு ஒரு லாரிக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மாதந்தோறும் லஞ்சம் தர வேண்டும். இல்லையெனில் செங்கல் சூளைக்கு மணல் எடுக்க முடியாதபடி லாரியை பிடித்து பறிமுதல் செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

அவரிடம் பேரம் பேசுவதற்காக ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து ஜெயராஜ் (51) என்பவரை துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன் நியமித்தார். அதன்படி பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், தனக்கு ரூ.25 ஆயிரமும் லஞ்சம் தர வேண்டுமென லூர்துஜெயராஜ் கூறியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த பன்னீர்செல்வம், தன்னுடைய செங்கல்சூளை தொழில் பாதிக்கப்படாமல் இருக்க பணம் தர அவரிடம் பெயரளவில் ஒப்புக்கொண்டார்.

எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தன்னிடம் ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லூர்துஜெயராஜ் ஆகியோர் மிரட்டி பணம் கேட்பதாக புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பன்னீர்செல்வத்திடம் கொடுத்து அனுப்பினர்.

அதன்படி பணத்தை எடுத்துக்கொண்டு முதலில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து ஜெயராஜை அணுகியபோது அவர் ஆம்பூர் ஒ.ஏ.ஆர். தியேட்டர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிற்பதாகவும் அங்கு வந்து கொடுக்கும்படியும் தெரிவித்தார். இதனையடுத்து அவர் கூறிய இடத்துக்கு சென்ற பன்னீர்செல்வம் லூர்துஜெயராஜிடம் அவர் கேட்டபடி லஞ்சபணம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது காரில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் லூர்துஜெயரஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பன்னீர்செல்வம் சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரும் அங்கு சென்று வெளியே மறைந்திருந்தனர். அப்போது அலுவலகத்தில் வைத்தே துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜனிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார். உடனே வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் லஞ்ச பணத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன் வாங்கியபோது அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட தனராஜன் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஆபட்டியையும், சப்-இன்ஸ்பெக்டர் லூர்து ஜெயராஜ் வேலூரையும் சேர்ந்தவர்களாவர்.

தனராஜன், ஸ்ரீவில்லிபுத்தூரில் கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். அங்கிருந்து பணி மாறுதல் பெற்ற தனராஜன் கடந்த 2017-ம் ஆணடு ஏப்ரல் மாதம் ஆம்பூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story