மருத்துவ காப்பீட்டு திட்ட புகைப்படம் எடுக்க மூதாட்டியை 3 பேர் தூக்கி வந்ததால் பரபரப்பு


மருத்துவ காப்பீட்டு திட்ட புகைப்படம் எடுக்க மூதாட்டியை 3 பேர் தூக்கி வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2018 4:00 AM IST (Updated: 9 Feb 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ காப்பீடு திட்ட புகைப்படம் எடுக்க மூதாட்டியை போர்வையில் சுருட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு 3 பேர் தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் அறை எண் 114-ல் மக்கள் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த அறையில்தான் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் புகைப்படம் எடுக்கும் பணி அனைத்து வேலை நாட்களிலும் நடந்து வருகிறது.

காப்பீட்டு அட்டை உள்ளவர்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இதர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். அதற்கான மருத்துவ செலவு ரூ.4 லட்சம் வரை அரசு ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் அந்த நபரின் ரேஷன்கார்டு கொண்டுவந்து அடையாள அட்டைக்கான ரசீதை குடும்ப உறுப்பினர்களில் யாராவது வந்து பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பகலில் ஆம்புலன்ஸ் வந்தது. அதில் ஸ்டெச்சர் இல்லாததால் அதில் இருந்து 75 வயது மூதாட்டி ஒருவரை போர்வையால் சுற்றி, சுருட்டியபடி 3 பேர் கையில் தூக்கியவாறு, கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள மருத்துவ காப்பீடுக்கான புகைப்படம் எடுக்கும் இடத்துக்கு கொண்டு வந்தனர்.

அதைப்பார்த்த கலெக்டர் அலுவலகத்தில் உள்ளவர்கள் என்னவோ, ஏதோ என அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. சிலர் அவர்கள் பின்னாடியே ஓடிச்சென்று விசாரித்தபோது, அந்த மூதாட்டி பெயர் அலமேலு (வயது 75) என்பதும், பனமரத்துப்பட்டி அருகே உள்ள நல்லியம்புதூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கணவரை இழந்து தனிமையில் வசித்த அவர், முதியோருக்கான ஓய்வூதியம் பெற்று வந்ததும் தெரியவந்தது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் அருகே உள்ள அரியானூர் தனியார் ஆஸ்பத்திரியில் நடந்த சிறப்பு முகாமிற்கு உடல் நலமின்றி அலமேலு சென்றார். அப்போது திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அலமேலுவை பரிசோதித்த டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். பெரிய தொகை செலவாகும் என்பதால், ஆஸ்பத்திரி நிர்வாகம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், அலமேலுவுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இதுவரை எடுக்கப்பட வில்லையாம்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் தரப்பில் விசாரித்தபோது, மூதாட்டி அலமேலுக்கு உதவிட யாரும் இல்லாத நிலையில் அரசின் ஓய்வூதியம் பெற்று வருவதால், அவரது ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக அலமேலுவும் வரவேண்டும் என சொல்லப்பட்டதாம். அதைத்தொடர்ந்தே உறவினர்கள் 3 பேர், அலமேலுவை போர்வையால் சுற்றியபடி தூக்கி வந்தது தெரியவந்தது. அவரது நிலைமையை அறிந்து புகைப்படம் எடுக்கும் இடத்தில் உருக்கமான சூழல் நிலவியது. மூதாட்டியை தரையில் படுக்கவைத்த நிலையிலேயே புகைப்படம் எடுக்கப்பட்டது. 

Next Story