உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்


உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2018 4:15 AM IST (Updated: 9 Feb 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலத்தில் நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையை கண்டித்து உருக்காலை தொழிலாளர்கள் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உருக்காலையை தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், மத்திய அரசு சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து, சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு. குழு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுகுமாறன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினார். இதில் இரும்பாலை ஊழியர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து சவுந்திர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பா.ஜனதா அரசு பொறுப்பேற்றது முதல் தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மிக பெரிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சி மேற்கொள்கிறார்கள். அந்த வரிசையில், சேலம் உருக்காலைக்கு அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டிய பணிகளை வழங்காமல் நஷ்டப்படுத்தி, அதனை தனியாருக்கு விற்க முயற்சிக்கிறது. இதனை தடுத்து நிறுத்திட வேண்டும்.

கேரளா மற்றும் கர்நாடகாவில் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சித்த போது, அங்குள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராடி தடுத்து நிறுத்தினர். அதே போன்று தமிழகத்தில் உருக்காலையை பாதுகாக்க அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இதற்காக பொது வேலைநிறுத்தம் செய்திட முன்வர வேண்டும். உருக்காலையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்திடும் வகையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் மாநில அரசு துணை போகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story