போக்குவரத்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு


போக்குவரத்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Feb 2018 3:45 AM IST (Updated: 9 Feb 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சென்னிமலை,

பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி பாண்டியன், துணை ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பொக்லைன் எந்திரம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பொக் லைன் எந்திரம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதும், ஆவணங்கள் உரிமையாளரிடம் இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திர உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் சம்பவ இடத்துக்கு விரைவில் வரும்படி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பெருந்துறை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் பொக்லைன் எந்திரத்தின் முன்பு காரை நிறுத்தினார். பின்னர் அந்த நபர், ‘என் அனுமதி இல்லாமல் எப்படி பொக்லைன் எந்திரத்தை ஓட்டிச்செல்லலாம்’? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி பாண்டியன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் பொக்லைன் எந்திர டிரைவரும் சென்னிமலை போலீசில் புகார் மனு ஒன்று கொடுத்து உள்ளார். அந்த மனுவில், ‘பெருந்துறை சிப்காட்டில் இருந்து ஈங்கூருக்கு நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரத்தை ஓட்டிச்சென்றேன். ஈங்கூர் பகுதியில் சென்றபோது பொக்லைன் எந்திரத்தை போக்குவரத்து அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார்.

பின்னர் பொக்லைன் எந்திரத்தின் ஆவணங்களை கேட்டார். அதற்கு நான் ஆவணங்கள் பொக்லைன் எந்திர உரிமையாளரிடம் உள்ளது என்று கூறினேன். அப்போது அந்த அதிகாரி என்னை தரக்குறைவாக பேசி, தாக்கினார்.

இதனால் நான் சென்னிமலையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். எனவே என்னை திட்டி, தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த 2 புகார்கள் மீதும் சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story