ஜனாதிபதி விழாவில் தேவேகவுடாவுக்கு அவமானம்: கர்நாடக சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் உறுப்பினர் ரேவண்ணா கொண்டு வந்தார்


ஜனாதிபதி விழாவில் தேவேகவுடாவுக்கு அவமானம்: கர்நாடக சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் உறுப்பினர் ரேவண்ணா கொண்டு வந்தார்
x
தினத்தந்தி 9 Feb 2018 3:00 AM IST (Updated: 9 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி விழாவில் தேவேகவுடாவுக்கு அவமானம் இழைக்கப்பட்டதாக கூறி கர்நாடக சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானத்தை உறுப்பினர் ரேவண்ணா கொண்டு வந்தார்.

பெங்களூரு,

ஜனாதிபதி விழாவில் தேவேகவுடாவுக்கு அவமானம் இழைக்கப்பட்டதாக கூறி கர்நாடக சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானத்தை உறுப்பினர் ரேவண்ணா கொண்டு வந்தார்.

உரிமை மீறல் தீர்மானம்

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ரேவண்ணா எழுந்து, உரிமை மீறல் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

அவர் பேசுகையில், “சரவணபெலகொலாவில் மகா மஸ்தகாபிஷேக விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு பேச அனுமதி வழங்கவில்லை. மேலும் அழைப்பிதழில் எனது பெயர் இடம் பெற்று இருந்தாலும் கூட என்னையும் பேச அனுமதிக்கவில்லை. இதனால் தேவேகவுடா மற்றும் எனக்கு அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. இது எங்களின் உரிமைக்கு பங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த உரிமை மீறல் தீர்மானத்தை உரிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும்“ என்றார்.

தனிப்பட்ட விஷயங்களுக்கு...

இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா, “இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் இருந்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்“ என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், “மேல்நோட்டமாக பார்க்கும்போது இதில் உறுப்பினரின் உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. எனவே இதை உரிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும்“ என்றார்.

அப்போது ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேவண்ணா தனது கோரிக்கையை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையின் முன் வந்து தர்ணா நடத்தினார். அப்போது பா.ஜனதா உறுப்பினர் சி.டி.ரவி பேசுகையில், “நமது மாநிலத்தில் முன்னாள் பிரதமர் என்ற பெருமையாக இருப்பவர் ஒரே ஒருவர் தேவேகவுடா தான். அவருக்கு அவருடைய சொந்த மாவட்டத்திலேயே அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல“ என்றார்.

உரிமை குழுவுக்கு...

இதையடுத்து உறுப்பினர் ரேவண்ணா கொண்டு வந்த உரிமை மீறல் தீர்மானம் உரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து ரேவண்ணா தனது இருக்கைக்கு திரும்பினார்.

Next Story