முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி மீண்டும் சிறையில் அடைப்பு


முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி மீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 9 Feb 2018 4:30 AM IST (Updated: 9 Feb 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி போலீஸ் காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் நிரவியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசப்பட்டு, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சாராய வியாபாரி ராமுவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராமுவின் 2-வது மனைவி எழிலரசி உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான விக்ரமன் தலைமறைவாக இருந்துவந்தார்.

போலீஸ் காவலில் விசாரணை

கடந்த 29-ந் தேதி புதுச் சேரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பெண் தாதா எழிலரசி தலைமையில் நடந்த சதி திட்ட ஆலோசனை கூட்டத்தின்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு தொடர்பாக காரைக்கால் போலீசார் புதுச்சேரிக்கு சென்று விக்ரமனை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னாள் அமைச்சர் கொலையில் முக்கிய குற்றவாளியான விக்ரமனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 5-ந் தேதி காரைக்கால் நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர். இதையடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறையில் அடைப்பு

அதன்பேரில் ரகசிய இடத்தில் வைத்து விக்ரமனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 3 நாள் விசாரணை முடிந்த நிலையில் விக்ரமனை நேற்று காரைக்கால் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். விக்ரமனிடம் நடத்திய விசாரணையில் ராமு கொலைக்கு முன்னாள் அமைச்சர் சிவக்குமார் தான் காரணம் என்பதால் அவரை திட்டம் தீட்டி கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story