தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு


தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 9 Feb 2018 4:15 AM IST (Updated: 9 Feb 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் பட்டிக்குள் புகுந்த வெறி நாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் செத்தன.

அலங்கியம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இறைச்சி மஸ்தான் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி காளியம்மாள். இவர்கள் அந்த பகுதியில் ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். இதற்காக 25 பெரிய ஆடுகளும், 15 குட்டி ஆடுகளும் வைத்திருந்தனர். இந்த ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதும், அதன் பின்னர் இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைப்பதும் உண்டு.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் இரவு அந்த ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைத்து வைத்து விட்டு தூங்கச்சென்றனர்.

7 ஆடுகள் சாவு

நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டு பொன்னுசாமியும், காளியம்மாளும் எழுந்தனர். உடனடியாக வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது 20-க் கும் மேற்பட்ட வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து அங்கு அடைத்து வைத்திருந்த ஆடுகளை வெறித்தனமாக கடித்து குதறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆடுகள் அலறின. சில ஆடுகள் உயிர் பிழைக்க அங்கு இங்குமாக ஓடின.

எனவே பொன்னுசாமி-காளியம்மாள் இருவரும் கம்புகளை எடுத்து சென்று அந்த வெறிநாய்களை விரட்டினார்கள். இதற்கிடையில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 பெரிய ஆடுகளும், 2 குட்டி ஆடுகளும் என மொத்தம் 7 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக தாராபுரம் கால்நடை துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கால்நடை மருத்துவர் அன்வர், மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில்பாளையம் நடுத்தோட்டத்தை சேர்ந்த வெங்கிடம்மாள் என்பவருக்கு சொந்தமான பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில் அவைகள் இறந்தன. அதற்குள் தற்போது மேலும் 7 ஆடுகள் வெறிநாய்கள் தாக்குதலுக்கு பலியாகி உள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் இரவு நேரங்களில் தங்கள் குழந்தைகளை வெளியே தனியாக செல்ல வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

இது குறித்து பொன்னுசாமி கூறியதாவது:-

தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு தாராபுரத்தில் இருந்து தாளக்கரை செல்லும் சாலையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி கோழிக் கடை கழிவுகளும், ஆடு-மாடு இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இவற்றை நாய்கள் தின்றுவருகின்றன. சில நேரங்களில் இறைச்சி கழிவுகள் கிடைக்காதபோது விவசாயிகள் அமைத்துள்ள பட்டிக்குள் புகுந்து அங்கு உள்ள ஆடுகளை கடித்து குதறுகின்றன. இதனால் அடிக்கடி ஆடுகள் இறந்து வருகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அத்துடன் தாராபுரம் நகராட்சியில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள தெரு நாய்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story