அறுவடை தொடங்கிய நிலையில் பாபநாசம் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகிறது உடனே நிறுத்த விவசாயிகள் கோரிக்கை


அறுவடை தொடங்கிய நிலையில் பாபநாசம் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகிறது உடனே நிறுத்த விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2018 3:00 AM IST (Updated: 9 Feb 2018 11:36 PM IST)
t-max-icont-min-icon

அறுவடை தொடங்கிய நிலையில் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குளங்களில் நிரம்பி வீணாகிறது

நெல்லை,

அறுவடை தொடங்கிய நிலையில் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குளங்களில் நிரம்பி வீணாகிறது. எனவே, தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீர்மட்டம் சரிவு


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பாசன தேவைக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இதில் 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 78.10 அடியாக இருந்தது. இந்த அணை பகுதியில் பெய்த திடீர் மழையால் அணைக்கு வினாடிக்கு 428 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 20 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அணையின் நீர்மட்டம் தினமும் மளமளவென சரிந்து வருகிறது. 130 அடிக்கு மேல் சென்று உச்சத்தை நெருங்கிய பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களில் 78 அடிக்கு குறைந்து விட்டது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 5 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி ஆகும். இங்கு தற்போது 2 ஆயிரத்து 42 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 37.14 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

சேர்வலாறு அணை வறண்டது

இதுதவிர அருகில் உள்ள சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடி ஆகும். இதில் 100 அடிக்கு மேல் இருந்த நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி வெறும் 19.68 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதனால் அணை வறண்டு காணப்படுகிறது.

வீணாகும் தண்ணீர்

இந்த சூழ்நிலையில் தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் லோயர் அணையை கடந்து ஒருங்கிணைந்த நிலையில் வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் தாமிரபரணியில் அபரிமிதமாக ஓடுகிறது. இதனை பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் திறந்து விட்டுள்ளனர். அந்த தண்ணீர் குளங்களுக்கு சென்று மறுகால் பாய்ந்து வீணாகிறது.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் நெற்பயிர் அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் தேவையில்லை. இதேபோல் மற்ற இடங்களில் குறைந்த நாட்களே நெற்பயிருக்கு தண்ணீர் தேவை. இந்த நிலையில் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், குளங்கள் நிரம்பி வீணாக தண்ணீர் மறுகால் பாய்ந்து மறுபடியும் தாமிரபரணி ஆற்றுக்கு செல்கிறது.

நீர்திறப்பை நிறுத்த வேண்டும்

இதுகுறித்து அம்பையை சேர்ந்த பத்மநாபன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

தமிழக அரசு அறிவித்துள்ளபடி குறிப்பிட்ட நாட்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தற்போது நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தின் ஆரம்ப அறிகுறிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை வீணாக திறந்து விடுவது சரியான நடவடிக்கை இல்லை.

இனி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதுவரை நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வறட்சி நிலவும். அதுவரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீரை திறந்து வீணாக்காமல் அணைகளில் இருப்பு வைக்க வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் அணையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். தற்போதையை சூழ்நிலையில் குடிநீருக்கு மட்டுமே குறைந்த அளவு தண்ணீரை திறந்தால் போதுமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story