சிவகங்கை தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு காதில் பூ வைத்து ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


சிவகங்கை தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு காதில் பூ வைத்து ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு காதில் பூ வைத்துக்கொண்டு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும், பொது மாறுதலுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு கடந்த காலத்தைபோல் 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும், அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் இணையதள வசதியுடன் கணினி வழங்கி அதை இயக்கிட பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் உரிய ஆணைகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான ஆணைகள் வெளியிடப்படாததால் நேற்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதேபோல் சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்கள் காதில் பூ வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ஞான அற்புதராஜ், ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட பொருளாளர் குமரேசன், துணை தலைவர்கள் மாலா, ஜஸ்டின் திரவியம், அமலசேவியர், துணைச் செயலாளர்கள் ஜீவா ஆனந்தி, ரவி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story