பஸ் நிலையங்களில் புதிய கட்டண விவர பட்டியலை வைக்க வேண்டும், போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு கோரிக்கை


பஸ் நிலையங்களில் புதிய கட்டண விவர பட்டியலை வைக்க வேண்டும், போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவுப்படி பஸ் கட்டண உயர்வுக்கு பின்பு, பஸ் நிலையங்களில் புதிய கட்டண விவர பட்டியலை வைக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழக அரசு அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வுப்படி புறநகர் பஸ்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா வீதம் வசூலிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆனால் புறநகர் பஸ்களில் மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் பஸ் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் பஸ்சில் பாலவநத்தத்துக்கு சென்ற பயணி ஒருவர் ரூ.7 கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளார். மீண்டும் அதே பஸ் அருப்புக்கோட்டையில் இருந்து திரும்பி வரும் போது, அந்த பயணி அதே பஸ்சில் விருதுநகருக்கு திரும்பி உள்ளார். அப்போது பஸ் கண்டக்டர் ரூ.10-க்கான டிக்கெட்டை கொடுத்துள்ளார். இதனால் பஸ் கண்டக்டருக்கும், பயணிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதே போன்ற பிரச்சினைகள் பல வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதுபற்றி விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் கண்ணன் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட போக்குவரத்துக்கழக பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கலெக்டரிடம் புகார் செய்துள்ளார்.

இந்த நிலையில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சென்னை ஐகோர்ட்டு பஸ் கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கருத்து தெரிவிக்கையில் பஸ் நிலையங்களில் உயர்த்தப்பட்ட புதிய பஸ் கட்டணம் பற்றிய அறிவிப்பு பலகையை வைக்க போக்குவரத்து கழக நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சமூக சேவை சங்கங்களும், அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் போக்குவரத்து கழக நிர்வாகம் பிரச்சினைகளை சந்திக்க தயாராக உள்ளதே தவிர பயணிகளுக்கும், பஸ் ஊழியர்களுக்கும் இடையே சுமூகதீர்வு ஏற்படும் வகையில் பஸ் நிலையங்களில் கட்டண விவர அறிவிப்பு பலகையை வைக்க தயாராக இல்லை.

எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டாமல் அனைத்து முக்கிய பஸ் நிலையங்களிலும் புதிய பஸ் கட்டண விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டரும், இதுபற்றி போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டியது அவசியமாகும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

Next Story