ஆணவக்கொலை, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்


ஆணவக்கொலை, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆணவக்கொலை மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொண்டி,

திருவாடானையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு, சாதி ஒழிப்பு முன்னணி, இளந்தமிழகம் மற்றும் மகளிர் மன்றங்கள் சார்பில் சிவகங்கை மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் கிறிஸ்தவர்கள் மீதான தீண்டாமை குறித்த பொது விசாரணை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்தியாகு தலைமை தாங்கினார். கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு அருள்தாஸ் முன்னிலை வகித்தார். அனைவரையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி குணசேகரன் வரவேற்றார். இதில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிப்பரந்தாமன் கலந்துகொண்டு தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை பற்றிய பொது விசாரணை ஆய்வறிக்கையை வெளியிட்டார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக நாடு முழுவதும் தொடர்ந்து நடக்கக்கூடிய சாதியக்கொடுமைகள், தீண்டாமை கொடுமைகள், அதன் தாக்குதல்கள் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மீது தொடர்ந்து வருகிறது. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்தபோது இங்கு தீண்டாமை கொடுமைகள் இந்து மதத்தில் அதிகம் இருந்ததால் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு சென்றார்கள். ஆனால் அங்கும் இன்றுவரை சாதியக்கொடுமைகள் போன்ற தீண்டாமை கொடுமைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக திருவாடானை தாலுகாவை சேர்ந்த கிறிஸ்தவரான குரு மாணவர் மைக்கேல்ராஜுக்கு சிவகங்கை மறைமாவட்டம் இன்று வரை குருப்பட்டம் வழங்க மறுத்து வருகிறது.

சிவகங்கை மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபை ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மீது நடத்திவரும் பல்வேறு தீண்டாமை பாகுபாடுகள் குறித்து விரிவாக அறிக்கை வெளியிடப்பட்டுஉள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 187 சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகளை தடுக்கவும், தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story